அரசாங்கம் பலவீனத்தை மறைத்துக்கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்துகிறது..!!

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் சிறந்த கொள்கை திட்டம் ஏதும் கிடையாது என்பதுடன்  தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவை நாட்டு மக்கள் இவ்வருட இறுதியில் அறிந்துகொள்வார்கள்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பல இறக்குமதிகள் ஊடாக வரிச்சலுகை வழங்கியது. இதனால் சாதாரண மக்கள் பயன்பெறவில்லை. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னின்று செயற்பட்ட செல்வந்தர்கள் மாத்திரம் பயனடைந்தார்கள்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் 2010 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அச்சிடாத அளவிற்கு நாணயங்களை அச்சிட்டுள்ளது.

இவ்வாறான தன்மை நாட்டின் நிதி நெருக்கடி நிலையை வெளிப்படுத்தியுள்ளது.தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையினை செயற்படுத்துகிறது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் வகுக்கப்பட்ட புதிய பொருளாதார முகாமைத்துவ கொள்கைகள் அனைத்தையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறந்த விடயங்களை செயற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. சர்வதேசத்தில் அரச முறை கடன்களை பெற முடியாத அளவிற்கு அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் முரண்பாடுகள தோற்றுவித்துள்ளது. இவ்வாறான தன்மை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

வேலையில்லா பற்றாக்குறை தோற்றம் பெற்றுள்ளது.வெளிநாட்டு முதலீடுகள் நாட்டில் தொழிற்துறையை மேம்படுத்த வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகளினால் கூட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை.

அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சுட்டிக்காட்ட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts