7 வயதுச் சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் படுகாயம்- கிளிநொச்சியில் சம்பவம்..!!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்துவந்த குடும்பத்தில், சில நாட்களுக்கு முன்னர் தந்தை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

தன்னுடைய சகோதரனின் வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு தந்தையார் வெளியேறியதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், குறித்த வீட்டில் மூத்த மற்றும் இளைய பிள்ளை ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நான்கு வயதுடைய இளைய மகன் படுகாயமடைந்ததுடன், கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறார்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த 17 வயதுடைய சிறுவன், குறித்த சிறார்களில் இரண்டாவது பிள்ளையாகிய ஏழு வயதுச் சிறுவனான அப்துல் ரஹ்மான் தயா என்பவரை குறித்த சிறுவர்களின் சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், 17 வயதுச் சிறுவன் மட்டும் திரும்பிவந்த நிலையில், ஏழு வயதுச் சிறுவனைத் தேடிச் சென்றபோது, அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இந்நிலையில், உடனடியாக சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மரண விசாரணை அதிகாரி பிறேம்குமார், சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தியதுடன், இரத்தம் உறைந்தே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட 17 வயதுச் சிறுவன் தலைமறைவாகியுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் தேடி வருவதாகத் தெரியவருகிறது.

Related posts