தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்..!!

கொரோனா தடுப்பூசியை இணையத்தில் விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பிவைத்துள்ளது.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான கோ-வின் 2.0 மற்றும் ஆரோக்கிய சேது செயலியில், அரசு மருத்துவமனைகளின் விவரங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் விவரங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

இதில் மக்கள் தங்களுக்கு விருப்பமுள்ள ஏதேனும் ஓர் மருத்தவமனையில் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். முன்பதிவு செய்யும்போதே திகதி, நேரம் ஆகியவற்றை அந்தந்த மருத்துவனைகளின் அட்டவணைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த மருத்துவமனையை தேர்வு செய்தாலும் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும், தனியார் மருத்துவமனையில் முன்பதிவு செய்வோர் முன்பதிவிற்கான கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை தாண்டி அனைத்து சுகாதார அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழுவிற்கும் இவ்வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோ-வின் 2.0 இணையதளத்தை பயன்படுத்துவது பற்றிய விரிவான அறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி போட வரும் நபர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வருவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts