சமக – ஐஜேகே இடையே புதிய தேர்தல் கூட்டணி..!!

சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதியானது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சைமுத்துவும் அறிவித்தனர்.

அதன்பின் சென்னை வடபழனியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும், மாற்றத்தை தர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய ஜனநாயக் கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியின் முதன்முறையாக இணைந்து புதிய மாற்றத்திற்கான கூட்டணியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இக்கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பும் கட்சிகளை வரவேற்பதாகவும், கூட்டணியில் இணைய கூடிய அனைத்து கட்சிகளுமே சமமான தலைமைதான் எனவும் தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றம் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்.

கமல் நல்லவர்கள் வரவேண்டும் என்கிறார். நாங்களும் அதையே சொல்கிறோம் அதனால் இணைவோம் என நினைக்கிறோம். அடுத்து வரும் நாட்களில் மேலும் பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய இருப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.

உடன் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் துணை பொதுச்செயலாளர் ரவி பாபு கட்சியின் முதன்மை அமைப்புச் செயலர் எஸ் வெங்கடேசன் கொள்கைபரப்பு செயலாளர் எம் எஸ் ராஜேந்திரன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts