கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பசிலுடனான கூட்டத்திலும் பங்கேற்பு..!!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள அதேவேளை, சுகாதார அமைச்சு வளாகம் மூடப்பட்டதுடன், பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சுடன் தொடர்புபட்ட பொது சுகாதார பரிசோதகர்களிடம் கடந்த ஒரு வாரத்தில் அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் பெயர்பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோண தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் சுகாதார அமைச்சின் செயலாளர் பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பல உயரதிகாரிகள் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்புகளில் அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திற்கும் அமைச்சர் சென்றுள்ளார். இங்கு கட்சியின் சிரேஸ்ட தலைவர் பசில் ராஜபக்ஷ உட்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைச்சரும் கலந்துகொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகம் நேற்று மூடப்பட்டு கிருமிநீக்கப்பணிகள் இடம்பெற்றன.

இதேவேளை தான் மேற்கொண்ட கொரோனா வைரஸ் சோதனையின்போது தான் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியான போதிலும் தான் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்துள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts