தம்மிகவின் பாணியை அரசாங்கம் ஊக்குவிக்கவில்லை என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தம்மிக பாணி குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டன.
மருத்துவ ரீதியான பரிசோதனைக்காக 2 வாரங்கள் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், இதுவரை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.
கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களில் சிலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி உள்ளனர். எனவே, இந்த வைரஸைக் குணப்படுத்துவதற்கான தெளிவான சான்றுகள் எங்கும் இல்லை.
அதாவது, நீங்கள் தடுப்பூசி போட்டாலும் அப்படித்தான். அதற்கமையப் பார்த்தால், இந்தப் பாணி சிறந்தது. இந்தப் பாணி குறித்த மேலும் பல தகவல்களைத் தேட வேண்டும். அரசாங்கம் இதை ஊக்குவிக்கின்றது என நான் நினைக்கவில்லை.
எந்தவொரு நபரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். எது எவ்வாறாயினும், அரசாங்கம் இதைப் பயன்படுத்துமாறு, இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.