ஜனாதிபதியிடம் முன்னாள் நிதியமைச்சர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை..!!

நல்லாட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அவசியம் தொடர்பாக மங்கள சமரவீர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,“பெரும்பாலான அரசியல் தலைவர்கள், மக்களை ஏமாற்ற அவர்கள் பயன்படுத்திய அதே பொய்களால் இப்போது தாக்கப்படுகிறார்கள்.

மேலும் நாட்டிற்கு பாதகத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இதேவேளை இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அணிதிரட்டுவது இன்று அவசியம்.

அத்துடன் இந்த புதிய முதலீடு, இன்று நாட்டின் பொருளாதார மையங்களில் ஒன்றான இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கை போன்ற ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின், முதலில் தேவையான பின்னணியைத் தயாரித்து, அதன் ஊடாக அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம் நாட்டிற்கு ஈர்க்கும் திட்டங்களினால் மாத்திரமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இன்று வியட்நாம், கம்போடியா போன்ற சோசலிச நாடுகள் கூட ஒரு நாட்டை வளர்ப்பதில் வெளிநாட்டு முதலீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.

மேலும், பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு வெளிப்படையான சந்தைப் பொருளாதாரத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அந்தவகையில் இதுபோன்ற பொருளாதார கட்டமைப்பினை கடந்த 2015 ஆம் ஆண்டில் எங்களது அரசாங்கம் எடுத்த முயற்சியின் காரணமாக, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை எம்மால் ஈர்க்க முடிந்தது.

மேலும், முதலீட்டு நட்பு சூழல் குறியீட்டின் வளர்ச்சியால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடிந்தது. மேலும் வசதியாக புதிய விதிகளை உருவாக்க நாங்கள் தயாராக இருந்தோம்.

எனவே தற்போதைய சூழ்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts