வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக பணிபுறக்கணிப்பு..!!

வவுனியா போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்கின்றமைக்கு எதிராக வவுனியா போக்குவரத்து சபையின் சாரதிகள், காப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று (சனிக்கிழமை) காலையில் இருந்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்  தெரிவித்துள்ளதாவது, “எந்தவித பிழையோ அல்லது காரணமோ இல்லாமல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சாலை முகாமையாளரிடம் கேட்டபோது தொழிலாளர்கள் சொல்லியே அவர்களை நீக்கியதாக தெரிவித்தார். நாம் அவ்வாறு எதனையும் சொல்லவில்லை.

தற்போதைய சாலையின் முகாமையாளர் ஏற்கனவே இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவர். எனவே இவர் இங்கு தொடர்ந்து பணிபுரிந்தால் ஒவ்வொரு தொழிலாளர்களையும் பழி வாங்கிக்கொண்டே இருப்பார். அவர் ஊழியர்களை தகாத வார்த்தைகளால்  பேசுகிறார். எனவே அவர் இங்கிருந்து வெளியேறினால் இந்த நிமிசமே நாம் பணி செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

எமது சாலையில் பணமே இல்லை. பேருந்துகளுக்கு டீசல் அடிப்பதற்கு கூட பணம் இல்லாத நிலமை நீடித்துள்ளது. சரியான நிர்வாகமும் முகாமைத்துவமும் இல்லாமையே இதற்கு காரணம் இப்போது இருப்பவருக்கு நிர்வாகமே தெரியாது.

இந்த விடயங்கள் ஊழியர்களான எங்களையே பாதிக்கிறது. எனவே இடமாற்றம் செய்யப்பட்ட உதவி சாலை முகாமையாளரின இடமாற்றத்தை இரத்துசெய்து தற்போது இருக்கும் முகாமையாளரை மாற்றவேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளும் அசௌகரியங்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts