எங்கள் மீது கை வைக்க வேண்டாம்! யாழில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்..?

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்ட நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி இன்று இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts