ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது விவகாரம்: சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா..!!

ஹொங்கொங் ஜனநாயக ஆர்வலர்கள் கைது விவகாரத்தில் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா, சீனா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றது.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங்கொங்கில், ஜனநாயகத்தை பறிக்கும் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமுல்படுத்தப்பட்ட சீனாவின் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அமெரிக்க சட்டத்தரணி உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆர்வலர்களை ஹொங்கொங் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளநிலையில், அமெரிக்கா, சீனா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ கூறுகையில், ‘இந்த அடக்குமுறை சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த மக்கள் மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்வதை நினைவூட்டுகிறது. ஹொங்கொங் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டுள்ள சீன அரசாங்கம், தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை அமெரிக்கா பரிசீலிக்கும்.

அரசியல் அடக்குமுறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஒரு அமெரிக்க குடிமகன் கைது செய்யப்பட்ட செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அமெரிக்க குடிமக்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படுவதையோ அல்லது துன்புறுத்துவதையோ அமெரிக்கா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது’ என கூறினார்.

வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது அடக்குமுறை, கொரோனா வைரஸ் விவகாரம், ஹொங்கொங் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட விடயங்களில் சீனாவுக்கும் அமெரிக்காவும் மோதல்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts