பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள்- டெஸ்ட் தொடர்கள்: இளம் வீரர்களை கொண்ட மே.தீவுகள் அணி அறிவிப்பு..!!

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடும், இளம் வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் முன்னணி வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அனுபவமில்லாத வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரொமாரியோ செப்பர்ட், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக கியோன் ஹார்டிங் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார்.

கொவிட்-19 தொடர்பான கவலைகள் அல்லது தனிப்பட்ட அச்சங்கள் காரணமாக ஜேசன் ஹோல்டர், கிய்ரான் பொலார்ட், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கோட்ரெல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்.

ஜேசன் முகமது தலைமையிலான ஒருநாள் அணியில், சுனில் அம்ப்ரிஸ், நக்ருமா போனர், ஜோசுவா டா சில்வா, கியோன் ஹார்டிங், ஜஹ்மர் ஹாமில்டன், செமர் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஆண்ட்ரே மெக்கார்த்தி, ஜார்ன் ஓட்லி, ரோவ்மன் பவல், ரேமான் ரீஃபர், ஹேடன் வோல்ஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிரெய்க் பிராத்வைட் தலைமையிலான டெஸ்ட் அணியில், ஜெர்மைன் பிளாக்வுட், நக்ருமா போனர், ஜோன் காம்ப்பெல், ராகீம் கோர்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், கவேம் ஹாட்ஜ், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஷெய்ன் மோஸ்லி, வீரசாமி பெருமால், கெமார் ரோச், ரேய்மான் ரீஃபர், ஜோமல் வாரிகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts