நாட்டில் நீடிக்கும் சீரற்ற காலநிலை: கண்டி – அக்குரணையில் வெள்ளம்

நாட்டில் நீடிக்கும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – அக்குரணை பகுதியில் தொடர்ந்தும் வௌ்ள நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கண்டியிலிருந்து மாத்தளை வரை பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்று வீதியாக வத்தேகம ஊடாக மாத்தளைக்கு பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக 06 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சப்ரகமுவ, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களை அவதானமாக செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts