ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவ முயற்சி – பாதுகாப்பு படை எச்சரிக்கை!

ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவ காத்திருப்பதாக பாதுகாப்புபடை தகவல் வெளியிட்டுள்ளது.

குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சிக்க கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு படையினர், ‘இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 5,100 முறை அத்துமீறிய தாக்குதலை நடத்தி  உள்ளது.

தற்போது, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி நாசவேலைகளில் ஈடுபடுத்துவற்கு சுமார் 300-ல் இருந்து 415 பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக காஷ்மீரின் பிர் பஞ்சால் பள்ளத்தாக்கில் 175 முதல் 210 பயங்கரவாதிகளும், ஜம்முவில் உள்ள தெற்கு பிர் பஞ்சால் பகுதியில் 119 முதல் 216 பயங்கரவாதிகளும் பதுங்கி  உள்ளனர்.

பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக எல்லையில் 20 ஊடுருவல் பாதைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இராணுவம், எல்லை பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு தவிர கிராம பாதுகாப்பு குழுக்கள், பொலிஸ் சோதனைச்சாவடிகள் மற்றும் எல்லைப்பகுதியில் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

எல்லை பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க பொலிஸ் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன”  எனத் தெரிவித்துள்ளனர்.

Related posts