மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்! விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கைது..!!

மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கரடியனாறு, பதுளை வீதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோகிராம் அமோனியா, டெட்டனேட்டர் குச்சி 729, சோவா வயர் 6 ஆயிரம் அடி, முலைவெடி 31, கரியம் 500 கிராம் என்பன மீட்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியாக ஜெயந்தன் படையணியில் 1991 இலிருந்து 1994 வரை இருந்துள்ளவர் என தெரியவருகிறது.

இதன் பின்னர் குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் வெடிபொருட்களை பயன்படுத்தி கல் உடைத்து வந்துள்ள நிலையில் கடந்த மாதம் இதற்கான அனுமதிப் பத்திரம் முடிவடைந்துள்ளதையடுத்து வெடிபொருட்களை கொள்வனவு செய்து அவர் மறைத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts