நாடு திரும்ப காத்திருக்கும் சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள்

வெளிநாடுகளில் இருந்து சுமார் 68 ஆயிரம் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

வெளிநாடுகளின் கொரோனா பரவல் காரணமாக நிலைமைகள் மோசமடைந்து வருவதால், அதிக எண்ணிக்கையிலான பணிநீக்கங்கள் மற்றும் வேலையின்மை காரணமாக அங்கிருந்து நாட்டிற்கு வரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலின் பின்னர் 2019 பெப்ரவரி மாதத்தில் வுஹான் நகரத்திலிருந்து 33 மாணவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வந்ததிலிருந்து தற்போதுவரை அமைச்சு கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த மீளழைத்து வரும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

அதன்படி இன்றுவரை 60 ஆயிரத்து 470 இலங்கையர்கள், 137 நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் 2ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சென்னை, மெல்போர்ன், குவைட், தோஹா, கனடா, சைப்ரஸ் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 400 பயணிகள் அழைத்து வரப்படவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத் திட்டத்திற்கு அமைய எதிர்வரும் நாட்களில் 10 விமானங்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக விமானம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் செஹான் சுமன சேகர தெரிவித்துள்ளார்.

Related posts