கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரியதல்ல என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த கருத்தினை வெளியிடுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரை விரைவில் அறிவுறுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் ஊடகமொன்றுக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸானது சுவாசக் குழாய் ஊடாக பரவுகின்றதே தவிர வயிற்றுப்பகுதியில் வேறு முறைமையில் பரவ முடியாது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வைரஸ்கள் உயிரணுக்களைத் தவிர, சடலங்களில் நீண்டகாலத்திற்கு நீடிக்காது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சடலங்கள் மீதான பி.சி.ஆர் பரிசோதனையில், தொற்று உறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டாலும் அதிலிருந்து வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பில்லை எனவும் இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் மரணித்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதன் ஊடாக நீர் ஆதாரங்களின் மூலமாக வைரஸ் பரவுவதற்கான ஆபத்து இல்லை என்றும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் பழைய வைரஸானது சுற்றுச்சூழலில் இருந்து மீண்டும் உருவாகுமா என்பது தொடர்ந்தும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, தற்போதைய அறிவியல் பூர்வமான தகவல்களுக்கு அமைய, கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை இந்த நாட்டில் அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts