25 நாட்களாக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலை பெற்றுக்கொள்ள எவரும் இல்லாத காரணத்தினால், கடந்த 25 தினங்களாக ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் உடல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 5 குளிர்சாதனப் பெட்டிகள் மாத்திரமே இருக்கும் பிரேத அறையில் தினமும் இறக்கும் நபர்களின் உடல்களை வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேலியகொடை பிரதேசத்தில் வீதியில் சுகவீனமுற்று காணப்பட்ட இந்த நபர் கடந்த 5 ஆம் திகதி சுவசெரிய அம்யூலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கு கடந்த 7 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது உடலில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என்பதால் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதில் தடையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 25 நாட்களாக உடல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் உடலை உடனடியாக தகனம் செய்ய வேண்டும் என்பதால், உறவினர்கள் எவராவது இருந்தால், உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையின் பொலிஸ் அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts