மெல்பேர்ன் டெஸ்ட்டின் திருப்பு முனை – ரகானேவைப் புகழ்ந்த பயிற்சியாளர்..!!

மெல்பேர்ன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ரகானே போராடி சதமடித்தது தான் அப்போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.

அடிலெய்ட் டெஸ்டில் 36 ஓட்டங்களில் சுருண்டபின், இந்திய அணி அபாரமாக மீண்டு வெற்றி பெற்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் ரகானே போராடி சதமடித்தது தான் இந்த டெஸ்டின் திருப்பு முனையாக அமைந்தது என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

‘விராட் கோலி, ரகானே இருவரும் ஆட்டத்தை நன்றாக கணிக்கக் கூடியவர்கள். களத்தில், கோலி அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துவார். ரகானே பொறுமையாக செயல்படுவார். முதல் டெஸ்டில் மோசமாக தோற்று அதன் பிறகு வலுவாக மீண்டெழுந்து வெற்றி பெற்ற வகையில், இந்திய கிரிக்கெட்டில் மட்டும் அல்ல, உலக கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts