பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ‘த்ரில்’ வெற்றி..!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கின்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த சனிக்கிழமை மவுண்ட் மங்கானுவில் ஆரம்பமானது.

இதில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 431 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் வில்லியம்சன் 129 ஓட்டங்களையும், வைட்லிங் 73 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 70 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், யாசிர் ஷா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அணித்தலைவர் ரிஸ்வான் 72 ஓட்டங்களையும், பகீம் அஸ்ரப் 91 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும் டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட், வக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. தொடக்க வீரர்களான லாதம் மற்றும் பிளெண்டல் ஆகியோர் அரை சதமடித்தனர். 45.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து, 373 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் இருவரும் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

நடுவரிசையில் களமிறங்கிய பவாட் அலாம், அணித்தலைவர் ரிஸ்வானுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

ஆனால், ரிஸ்வான் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும், போட்டியின் போக்கு மாறியது. தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதம் பெற்ற பவாட் அலாம் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தானின் கடைசி துடுப்பாட்ட வீரர்கள் போராடிய போதும், நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள் தங்கள் துல்லியமான பந்துவீச்சின் மூலம் வெற்றியைப் பறித்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 271 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 5ஆம் நாள் ஆட்டம் முடிவடைவதற்கு இன்னமும் 4 ஓவர்கள் இருந்த நிலையில் போட்டி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாயகனாக சதம் குவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது.

Related posts