சிறைச்சாலைகளில் சனநெரிசல் என்பதனால் குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் – கமால் குணரட்ன..!!

சிறைச்சாலைகளில் சனநெரிசல் என்ற காரணத்தினால் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்தினால் குற்றவாளிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுதலை செய்யாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று பலருக்கு சிறையில் இருந்திருக்க நேரிட்டிருக்கும் எனவும் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த காலங்களில் என்ன செய்தார் என்பது நாட்டுக்கே தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும், கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படும் எனவும் ஜெனரால் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

Related posts