இன்றைய அரசு ஊடக சுதந்திரத்தை மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரின் புகைப்படத்தையும், சொற்களையும் பிரசுரித்தமைக்கு எதிராக தனியார் பத்திரிகை மீது யாழ்ப்பாணம் பொலிஸாரால், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது கண்டன அறிக்கையில்,
குறித்த பத்திரிகை வரலாற்றில் பலமுறை வன்முறைகளுக்கு உள்ளானது. பத்திரிகை நிறுவனத்தையே தீ மூட்டி எரித்தனர். பத்திரிகையாளர்களைக் கொன்றனர். போர்க்காலத்திலும் எத்தனையோ தடவைகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கினர். ஆனால், குறித்த பத்திரிகை அர்ப்பணிப்புடன் துணிச்சலுடன் செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு நீதியை நிலைநாட்டியிருக்கிறது என்பது சாதனையே.
இன்றைய அரசு சர்வாதிகாரத்தனமாக அடக்குமுறை நடவடிக்கைகளை பத்திரிகைக்கு எதிரான அவழக்குகளைப் போட்டு அச்சுறுத்துவது ஆச்சரியமானதல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிடுவது குற்றமென்றால் 2002ஆம் ஆண்டுகளில் போர் நிறுத்தம் செய்து, கையெழுத்திட்டு அன்றைய அரசும் விடுதலைப்புலிகளுடன் நோர்வே ஒஸ்லோ வரையிலும் பேச்சில் ஈடுபட்டமையை நினைவுபடுத்த வேண்டும். அவ்வாறான அரசு ஊடக சுதந்திரத்தை மறுத்து நிற்பது ஜனநாயக விரோதமானது.
ஏற்கனவே ஜனநாயக சக்திகள் வேறுபாடின்றி அரசியலில் தலைவர்கள், அமைப்புக்கள் இந்த பத்திரிகைக்கு எதிரான, ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளமையை வரவேற்கவேண்டும்.
இப்போதைய அரசு குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தமையைக் கண்டிக்கின்றோம். அந்த வழக்கைத் திருப்பிப் பெறவேண்டுமென அரசை வற்புறுத்துகின்றோம். அந்த வழக்கில் அந்த பத்திரிகை வெற்றிபெறும் எனவும் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.