தெமோதரை எல்லந்த கற்குவாரியை மீண்டும் இயங்கச் செய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள், பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கற்குவாரியில் பணிப்புரியும் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
100 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்தக் கற்குவாரியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிப்புரிந்து வருகின்றனர் என்றும் கடந்த ஒரு மாதகாலமாக கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, மீண்டும் கற்குவாரியை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பதுளை- பண்டாரவளை வீதியில் போக்குவத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த எல்ல பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.எம்.என்.குமுதினி, தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச் சென்றுள்ளனர்.