அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உறவுகள் போராட்டம்!

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோருவதுடன் அவர்களின் விடுதலை வலியுறுத்தி, அவர்களின் உறவுகள் போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இந்த கவனயீர்ப்பு  போராட்டம் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே குறித்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தமது உறவுகளின் விடுதலைக்காக இன,மத,கட்சி பேதமின்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டுமென உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றியும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts