குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும் – கோலிக்கு ஸ்மித் வாழ்த்து..!!

குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள் என இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு அவுஸ்ரேலிய அணி வீரர் ஸ்மித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்டுகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் துடுப்பெடுத்தாடிய அருமையாக இருந்தது.

அந்த டெஸ்ட் முடிந்து அவரை களத்தில் சந்தித்த போது, ‘பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள்’ என்று அவரிடம் கூறினேன்.

அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து இங்கேயே இருந்தால் அவருக்கு நிறைய நெருக்கடி இருந்திருக்கும். முதல் குழந்தை பிறப்புக்காக அவர் தாயகம் திரும்ப எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர். அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். இந்த தருணத்தை நிச்சயம் தவற விடக்கூடாது.

முதல் டெஸ்டில் எங்களது வேகப்பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. நான் பார்த்தமட்டில் அனேகமாக கடைசி 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த பந்து வீச்சு இது தான். குறை சொல்ல முடியாத அளவுக்கு துல்லியமாக பந்து வீசினர்.

இது போன்ற பந்துகள் துடுப்பின் முனையில் பட்டு பிடிஎடுப்பிற்குத்தான் தான் செல்லும். இந்திய அணியினர் அந்த தோல்வியையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைவிட்டு நகர்ந்து தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள். தாங்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து டெஸ்ட் போட்டி முடிந்ததும் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய அடுத்த போட்டியின் செயல்பாடு அமையும். இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகு இப்படி யோசிப்பது நல்லது.

மெல்போர்னில் அரங்கேறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறு வயதில் கனவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மறுநாள் இந்த போட்டியை குடும்பத்தினருடன் பார்த்த அனுபவம் உண்டு.

ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் களம் காண்பது எப்போதும் சிலிர்ப்பாக இருக்கும். இந்த முறையும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் சிட்னியில் 3-வது டெஸ்ட் நடக்குமா? என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தரை திட்டமிட்டபடி சிட்னியில் டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இங்கு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் சிட்னியில் விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்போம். அதே சமயம் மருத்துவ, சுகாதாரத்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்போம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts