ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 822 பேர் இணைவு!நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பம்..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் ,அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அரசாங்க தகவல் திணைக்கள ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வேலையற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக 248 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஆறு மாத கால பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான பயிற்சிகளை பலநோக்கு அபிவிருத்தி திணைக்களம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இதன் இரண்டாம் கட்டமாக 574 பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மட்டக்களப்பில் இன்று முதல் நடைபெற்று வருகின்றது.

இந்நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோருக்கான ஆறு மாத பயிற்சி நெறி தொடர்ச்சியாக பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ளது.

இது தவிர இவ்வாறு மாத பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் திணைக்களங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts