தடுப்பூசிகளை விநியோகிக்கும் திட்டம் தோல்வி – அமெரிக்கா அறிவிப்பு..!!

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகளை விநியோகிக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு பொறுப்பான இராணுவத் தளபதி ஜெனரல் குஸ்டாவ் பெர்னா தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலமான ஊடக சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர், வாக்குறுதி அளித்ததற்கமைய தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க முடியாது போனதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 12 இற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு குறிப்பிட்ட அளவிலும் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளையே வழங்க முடிந்ததாகவும் இந்த குழப்பத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் குஸ்டாவ் பெர்னா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், முன்னதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசியை பொது மக்களுக்கு வழங்குவதற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதை அடுத்து அவசர பயன்பாட்டுக்காக மொடர்னா தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுனால் 76 மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் 17.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts