மத்திய ஆப்கானிஸ்தானில் ஒரு மதக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிக்குண்டு தாக்குதலில், 15 பொதுமக்கள் உயிரிழந்ததோடு 20பேர் காயமடைந்துள்ளதாக உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குர்ஆன் பாராயண விழாவில் கலந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மத்திய கஸ்னி மாகாணத்தின் ஒரு மாவட்டத்தில் ஒரு ரிக்ஷாவில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன என்று உட்;துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஒருவாரத்திற்குள் நடந்த இரண்டாவது வெடிக்குண்டு தாக்குதல் இதுவாகும். இதற்கு முன் கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் முக்கிய அதிகாரி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.