தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவசரம் காட்ட மாட்டேன் – ட்ரம்ப்!

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் அவசரம் காட்ட மாட்டேன்  என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக அமெரிக்காவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பால் துவண்டு கிடக்கும் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக அங்கு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை முதல் கட்டமாக 30 இலட்சம் பேருக்கு செலுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது அமெரிக்க அரசாங்கம்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் பலருக்கும் முதலாவதாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித்தொடர்பாளர் ஜான் உலியோட் “தேசிய பாதுகாப்பு தலைமையின் ஆலோசனையின் பேரில் அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் பெறும் அதே பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி தங்களுக்கும் கிடைக்கிறது என்ற நம்பிக்கை அமெரிக்க மக்களுக்கு இருக்க வேண்டும்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, நமது தேசம் வளர்ச்சிக்கு மீண்டும் திரும்புவதற்காக நாம்தொடர்ந்து பணியாற்றி நமது குடிமக்களுக்கு, அமெரிக்க அரசு தடையின்றி, அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தொடரும் என்பதை மேலும் உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போதைக்கு தான் தடுப்பூசி எடுத்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்த ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முதலில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் இரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிகாரிகள் சற்று பொறுத்திருந்து கொரோனா தடுப்பூசியைப் பெற வேண்டும்.

எனவே வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை சரி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் கொரோனா தடுப்பூசிகளுக்கு அதிக காலம் காத்திருப்பார்கள்.

நானும் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் அவசரம் காட்டமாட்டேன். தற்போதைக்கு கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்ளப்போவதில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் அதை செய்ய எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts