விண்வெளி துறையில் இந்தியர்களின் திறமை உலக அளவில் பேசப்படும் – மோடி

தகவல் தொழில்நுட்ப துறையைப் போலவே விண்வெளி துறையிலும் இந்தியர்களின் திறமை  உலக அளவில் பேசப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விண்வெளி துறையில் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ள பிரபல நிறுவனங்கள் புதிய நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ‘காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும், விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பை பெறுவர்.

விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களின் உற்பத்தி கேந்திரமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும். தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் வாயிலாக இத்துறையில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் தனியார் முதலீடுகள் உருவாக்கப்படுவதன் வாயிலாக ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.  உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உயர்தர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.தகவல் தொழில்நுட்ப துறையில்  இந்தியர்கள் உலக அளவில் புகழ் பெற்றதை போலவே இத்துறையிலும் விரைவில் பேசப்படுவர் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts