பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட்: கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்- காத்திருப்பு பட்டியலில் வில்லியம்சன்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சகலதுறை வீரரான கொலின் டி கிராண்ட்ஹோம் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

வலது பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதைக் காரணமாக இத்தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் விளக்கம் அளித்துள்ளார். ஜனவரி நடுப்பகுதியில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோல அணித்தலைவராhன கேன் வில்லியம்சன் ரி-20 தொடருக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ளார். ஏனெனில் அவரது முதலாவது குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் இத்தொடரில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. எனினும் அவர் இரண்டாவது ரி-20 போட்டியில் அணியுடன் இணைவார் என தெரிகிறது.

இதுதவிர சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் காயத்திலிருந்து மீண்டுள்ள நிலையில், தனது உடற்தகுதியை நிரூபிக்க நியூசிலாந்து ‘ஏ’ அணியுடன் இணைவார்.

மேலும், முன்னதாக நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி-20 தொடருக்கு பிறகு முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் வேகப்பந்து வீச்சாளர் லொக்கி பெர்குசன் மீதான ஸ்கேன் முடிவுகள் வரவிருக்கின்றன. இதைப் பொறுத்து அவர் விளையாடுவது தீர்மானிக்கப்படும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு விரைந்துள்ளது.

இதில் முதலாவதாக ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் ரி-20 போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஒக்லாந்து- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts