ஜோ பிடனின் வெற்றியை உறுதிசெய்தது ‘எலக்டோரல் காலேஜ்’ குழு..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதனை எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழு உறுதிசெய்துள்ளது.

ஜனாதிபதியை தேர்வுசெய்வதற்கு எலக்டோரல் காலேஜ் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். இந்த நிலையில் தேர்வு செய்வதற்கான தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர். அரிசோனாவில் 11பேர், ஜோர்ஜியாவில் 16பேர், நெவடாவில் 6பேர், பென்சில்வேனியாவில் 20பேர், விஸ்கான்சினில் 10பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பிடனுக்கு வாக்களித்தனர்.

இதன்படி, ஜோ பிடன் 306 வாக்குகளையும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 232 வாக்குகளையும் பெற்றனர்.

அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்திட்டனர்.

தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் ஜனாதிபதியாவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது.

இதன்படி, கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பிடன் பெற்றார். இதன் காரணமாக 270 தேர்தல் வாக்குகளை பெற்று ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதை ஜோ பிடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.

ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுக்கும் நிலையில், ஜோ பிடன் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Related posts