விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டில் விவசாயிகளின் வருமானத்தை பிகார் விவசாயிகளின் வருமானம் அளவுக்கு குறைப்பதற்கு மத்திய அரசு விரும்புவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், இந்திய விவசாய குடும்பங்களின் வருவாய் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், இந்தியாவில் ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 77,124 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, ஒரு பஞ்சாப் விவசாய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2,16,708 ரூபாயாகவும் குறைந்தபட்சமாக, பிகாரைச் சோ்ந்த ஒரு விவசாய குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2,684 ரூபாயாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை சுட்டிக் காட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ஒரு விவசாயி தனது வருமானம், பஞ்சாப் விவசாயியின் வருமானத்தைப் போன்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால், அரசோ அந்த விவசாயியின் வருமானம், பிகார் விவசாயியின் வருமானமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த சட்டங்களால் விவசாயியின் வருவாய் குறையும் என்றும் அக்கட்சி கூறி வருகிறது.

மேலும், இந்த சட்டங்களால், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் நடைமுறை முடிவுக்கு வந்து விடும். சந்தைகள், மண்டிகள் இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தைப் அதிகரிக்கச் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறுகிறது.

Related posts