ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் விபத்து- பெண் உயிரிழப்பு..!!

ஹொரவப்பொத்தானை- வவுனியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகத்தில் விவசாய உற்பத்தி ஆராய்ச்சி உதவியாளராக கடமையாற்றும் ஹொரவப்பொத்தானை- ரிட்டிகஹவெவ பகுதியைச் சேர்ந்த எம்.அனுலா குமாரி (56 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த டிப்பர் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மற்றும் மனைவி டிப்பர் வாகனத்தில் மோதுண்டு பேருந்தின் சில்லுக்குள் சிக்குண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஹொரவப்பொத்தான பிரதேச வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது ஹொரவப்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts