லண்டனில் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம் திகதி கிழக்கு லண்டனின் Ilford பகுதியில் தனது பிள்ளைகளான 19 மாதங்களான பவின்யா நித்தியகுமார் மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
41 வயதான நித்தியகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள, இந்நிலையில், ஓல்ட் பெய்லியில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவரை காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தைகளின் தாய், இந்த சம்பவத்தின் போது குளித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நிஜிஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகளை கொலை செய்யும் போது, நித்தியகுமார் மருட்சி கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக மனநல மருத்துவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நித்தியகுமாரின் செயல்களின் விளைவுகள் “பேரழிவு தரும்” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு இளம் மற்றும் அப்பாவிக் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தையும், அவர்களது வாழ்க்கையையும் அவர்களது சொந்த தந்தையால் இழந்திருக்கின்றார்கள் என்று அவர் கூறியுள்ளார்.