சீனாவிலிருந்து அபுதாபிக்கு கொண்டுவரப்பட்ட 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள்..!!

சீனாவிலிருந்து அபுதாபிக்கு 20 இலட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அபுதாபி சுகாதாரத்துறை தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக போடப்படும் தடுப்பூசி மருந்துகள் சீனாவில் இருந்து அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு உதவியாக இருந்த தனியார்துறை நிறுவனங்களுக்கு பாராட்டையும் நன்றியையும் இதன்போது அவர் தெரிவித்தார்.

வெப்பநிலையை பராமரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போயிங் 777-300 இ.ஆர். என்ற சரக்கு விமானம் மூலம் இந்த தடுப்பு மருந்துகள் கொண்டுவரப்பட்டது.

குறிப்பிட்ட வெப்பநிலையில் சினோபார்ம் மருந்தை பராமரித்தால்தான் அதன் தன்மை மாறுபடாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி துறைமுகத்தில் உள்ள கிசாட் குளிரூட்டப்பட்ட சேமிப்பு மையத்தில் அந்த மருந்துகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட உள்ளது. இந்த கொரோனா தடுப்பு மருந்தை அமீரகத்திற்கு கொண்டு வருவதற்கு ஹோப் கன்சோர்டியம் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அந்த குளிரூட்டும் சேமிப்பு மையத்தில் பராமரிக்கப்படும் மருந்துகள் தேவைக்கேற்ப நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

Related posts