கிளிநொச்சியில் அரச காடுகளை அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!!

ஒதுக்குக் காடுகள் தவிர்ந்த ஏனைய அரச காடுகளை அபிவிருத்திக்காகப் பயன்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதன் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்கள அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது முதற்கட்டமாகப் பிரதேச செயலாளர்களுக்குக் கையளிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில் பிரதேச செயலாளர்களுடன், வனவள திணைக்கள அதிகாரிகளும் ஏனைய துறைசார்ந்த அதிகாரிகளும் இணைந்து கள விஜயம் ஒன்றினை மேற்கொள்வதன் ஊடாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை இனங்காண்பதன் ஊடாக பொருத்தமான தொடர் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துச் செல்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்கினை தீர்ப்பதன் நிமித்தம் காணி இனங்காணல் படிமுறையானது இரண்டு வார கால அவகாசத்தினுள் நிறைவேற்றப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related posts