இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது

லங்கா பிரீமியர் (எல்.பி.எல்.) லீக் ரி-20 தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில், கண்டி டஸ்கர்ஸ் அணியும் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்;சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் 59 ஓட்டங்களையும் மினோத் பானுக 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெயின், விஷ்வ பெனார்டோ மற்றும் குணரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கண்டி அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அசேல குணரத்ன ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் குசல் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் மற்றும் ஒலிவர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 52 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த கண்டி அணியின் அசேல குணரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts