புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளேன்! வைத்தியர் த.சத்தியமூர்த்தி..!!

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் வைத்திய சேவையை பாதிக்கும்.

ஆகையினால் புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யாழ். போதனா வைத்தியசாலையில் தினசரி சுமார் 800 வரையிலான நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவிலும், சுமார் 1100 நோயாளிகள் உள்ளக விடுதிகளிலும், சுமார் 2600 நோயாளர்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகளிலும் மருத்துவ சேவையினை பெறுகின்றனர்.

வடக்கில் ஏற்படும் எந்த மருத்துவ அனர்த்தங்களுக்கும் இறுதியாக சேவை நாடும் ஒரே நிறுவனமாக யாழ். போதனா வைத்தியசாலையே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தினமும் நிகழும் வீதி விபத்துக்களால் தலையில் காயமுற்று உயிருக்கு போராடுபவர்களுக்கான மூளை நரம்பு சத்திரசிகிச்சை, யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சை பிரிவில் தனிப்பட்ட சத்திரசிகிச்சை கூடம், பிரத்தியோக விடுதி வசதி என்பனவற்றுடன் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனால் சுமார் 500க்கு மேற்பட்டோரின் உயிர்கள் அண்மைக்காலத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சத்திர சிகிச்சைக்கென சிறப்பான உணர்வழி வைத்திய நிபுணர் தனது கடமையினை இங்கு செவ்வனே புரிகின்றார்.

இவரது சிறப்பு கடமைக்கு பதிலீடாக இடமாற்றத்தில் ஒரு உணர்வழி மருத்துவ நிபுணர் கடமையை பொறுப்பேற்கும் பட்சத்திலேயே அவ் வைத்திய நிபுணரை நிர்வாக ரீதியாக விடுவிக்க முடியும்.

இதனால் இவர் இடமாற்ற உத்தரவில் இருப்பினும் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து வெறுமனவே விடுவிக்க முடியாது.

அவ்வாறு விடுவிக்கப்படின் யாழ். போதனா வைத்தியசாலையின் மூளை நரம்பு மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் முடிவுறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்ப்படும். இதனால் தினசரி பல உயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்ப்படும்.

குறிப்பாக தினசரி நிகழும் விபத்து அவசர சிகிச்சைகள் பாதிக்கப்படும். பணிப்பாளர் என்ற ரீதியில் அத்தியவசியமான சேவைகளை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் என்பது மிகவும் இக்கட்டான நிலைக்கு எமது வைத்திய சேவையை இட்டுச்செல்லும்.

இது தொடர்பாக எமக்கு புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்த பணிப்பாளர்.

குறித்த விடயங்களை சில பத்திரிகைகள் தவறான பிழையான செய்திகளை பிரசுரித்து வருவதாகவும், அந்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் இன்று வரை 309 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 250 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Related posts