புதிதாக மையம் கொள்கின்ற இந்து மாகடல் – பசிபிக் அரசியற் சூறாவளியும்: ஈழத் தமிழரின் எதிர்காலமும்..!!

அமெரிக்காவின் ‘‘இந்தோ – பசுபிக் பிராந்திய” அரசியல் புவியியல் நலனும், இந்தியாவினுடைய “புவிசார் அரசியல் (Geopolitics) நலனும்” இணைதிருக்கின்ற ஒரு சந்தியில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற கொரோனாவுக்கு பின்னான புதிய உலக ஒழுங்கின் முதல் காலடி எடுத்து வைப்பு அமைகிறது என தொல்லியற்துறை மாணவன் திபாகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இரண்டாம் உலகப் போர் எவ்வாறு இந்த உலகை ஒரு புதிய உலக ஒழுங்கான இரு துருவ உலக அரசியல் ஒழுங்காக மாற்றி அமைத்ததோ, அதிலிருந்து எவ்வாறு 1990ஆம் ஆண்டு புதிய ஒற்றை மைய உலக ஒழுங்கு உருவாக்கியதோ அந்த ஒற்றை மையத்தில் இருந்து இன்று இன்னொரு வடிவில் மீண்டும் ஒரு இரு துருவ உலக அரசியல் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

இன்று இந்த இந்த புதிய இரு துருவத்தினரின் பனிப்போர் போக்கானது இதுவரை நிலவிவந்த ஒற்றை மைய உலக அரசியலை முடிவுக்கு கொண்டுவர வல்லதாய்க் காணப்படுகின்றது.

இன்றைய இந்த உலக அரசியலை கொரோனா என்கின்ற கொடிய உயிர்க்கொல்லி மாற்றி அமைத்திருக்கிறது. புதிய அரசியல் ஒழுங்கானது ஒற்றை மைய அரசியலில் இருந்து மாறுபட்டு இருதுருவ அல்லது பல்துருவ அரசியல்போக்கை ஸ்தாபிதம் செய்ய போகின்றது.

கொரோனாவுக்குப் பின்னான உலக ஒழுங்கு என்பது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மையத்தில் குறிப்பாக இந்தியாவின் புவிசார் அரசியலில் அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் சார்ந்த அரசியல் புவியியல் ( Political Geography) நலனிலும் இருந்துதான் ஆரம்பமாகப் போவதற்கான அரசியல் சூழல் எழுந்திருக்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் என்பது உலக அரசுகளின் அரசியல் , பொருளியல் , இராணுவ நலன்களையும் அதிகார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ஒரு பிராந்தியம் ஆகும்.

உலகளாவிய வர்த்தகத்தின் மையமாகவும் மேற்கு – கிழக்கு போக்குவரத்தும் இந்து சமுத்திரத்தின் உள்ளேயே நிகழ்கிறது. எனவே உலகளாவிய அனைத்து வகையான போக்குகளுக்கும் இந்து சமுத்திரம் உட்பட்டதாகவே காணப்படுகிறது.

இத்தகைய இந்து சமுத்திரம் காலனி ஆதிக்க காலத்தில், அது முற்று முழுதாக பிரித்தானியாவின் கைகளிலேயே இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆளுகை அமெரிக்க தலைமையிரான மேற்குலகிடமும், சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச நாடுகளின் சார்பு நாடுகளின் கைகளிலும் பிரிக்கப்பட்டிருந்தது.

1970ஆம் ஆண்டின் பின் சோவியத் யூனியனுன் இந்தியா கை கோர்க்கத் தொடங்கியது.

பங்களாதேஷ் பிரிவினையை தொடர்ந்த அன்றைய இருதுருவ அரசியலில் இலங்கையை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு சோவியத் சார்ந்து இந்தியாவும் அதேவேளையில் நேரடியாக மேற்குலகம் சார்ந்து அமெரிக்காவும் போட்டி போட்டன.

இதனால் இலங்கை இவர்களிடையேயான ஒரு ஆடுகளமாக மாறி இருந்தது. அதன் வெளிப்பாடுதான் பனிப்போர் முடிவின் இறுதிக்காலப் பகுதியில் இலங்கையை தன்னுடைய ஆளுகைக்கு கீழ் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சியாகவே 1987ஆம் உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தமும், இலங்கைக்கான இந்திய இராணுவ வருகையும் அமைந்திருந்தன.

பனிப் போரின் முடிவில் சோவியத்படை ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியது; இந்தியப்படையும் இலங்கையை விட்டு வெளியேறியது.

Related posts