‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயற்றிட்டத்தை செயற்படுத்த பிரதமர் ஆலோசனை

‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயற்றிட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிதி அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்திலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அதற்கு நிதி அமைச்சின் ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமெனவும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.

இலங்கையர்களில் 72 வீதமான கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்களின் வாழ்க்கை மட்டத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதிகாரத்துவத்திற்கு அன்றி மக்களின் அத்தியாவசிய விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னுரிமை பட்டியலொன்றை தயார்ப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் செயலாளர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts