நீண்டகாலம் தண்டனை பெறும் கைதிகளுக்கு மன்னிப்பு – அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்யும் நீதி அமைச்சு

கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

20 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுப்புக்காவில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதி அமைச்சு அமைச்சரவை பத்திரத்தை தயாரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.

மேலும் நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவித்தல் என்ற அடிப்படையில் கைதிகளின் தண்டனை முடிவடைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு பரோல் நிபந்தனைகளின் அடிப்படையில் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்கும் நடைமுறை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டார்.

மேலும் சிறிய அளவிலான பிணை கட்டணங்களை செலுத்த இயலாமல் சிறையில் இருக்கும் கைதிகள் தொடர்பான பிரச்சினைக்கும் தேர்வை எட்டுவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக கூறினார்.

இதேவேளை சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுமார் எண்ணாயிரம் கைதிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts