இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள புரிதல்களுக்கு ஏற்ப மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் தொடர்பான விடயங்களை மனிதாபிமானத்துடன், கையாள்வதின் அவசியம் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடியிருக்கின்றன.

அத்துடன் இந்த பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களையும் , நிவர்த்தி செய்வது இந்திய அரசாங்கமும் தமிழக மாநில அரசாங்கம் எடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது எடுத்துரைத்திருக்கின்றார்.

அத்துடன் இந்திய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளை அளிப்பதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதனடிப்படையில் இருதரப்பு கடற்றொழிலாளர்கள் விடயம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக காணொளி மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்திருக்கின்றார்.

Related posts