யாழ்.மாவட்டத்தில் கடும் மழை! வெள்ளத்தில் மிதக்கும் பல கிராமங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கொட்டித்தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சியில் இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை கொட்டியது.குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால், மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலைமை போன்று யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் புரேவி புயலால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாங்களில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பிய நிலையில், மீளவும் நலன்புரி நிலையங்களுக்குத் திரும்புவதாகும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், ஓடுவதற்கு இடமில்லாமல் பல வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனினும் மழை தொடருமாக இருந்தால் அடுத்து வரும் தினங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts