துயில் எழுந்த தமிழ்க் கட்சிகள்..!!

புதிய அரசியலமைப்பு மூலம் தான், இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டிலுள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என்று, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வரமுடியாமல் போனால், அரசியலை விட்டு விலகுவேன் என்று கூட சுமந்திரன் ஒருமுறை கூறியிருந்தார். அந்த அரசியலமைப்பை உருவாக்குவதில், சுமந்திரனும், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவும் தான் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.

அரசியல் உறுதியற்ற தன்மை, பெரும்பான்மை பலம் இல்லாமை போன்ற காரணங்களால், அந்த முயற்சிகள்ள் முழுமையாக தோல்வியில் முடிந்தன. இப்போது மீண்டும் ஒரு அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதற்கென ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேரில், பேராசிரியர் நசீமா கமர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோர் மட்டும் சிறுபான்மைப் பிரதிநிதிகளாக உள்ளனர். மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று, நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தாலும், கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணிக்கு சிறுபான்மையினப் பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது போலவே, நிபுணர் குழுவின் பணிகளும் முடிந்து விடும் போல தெரிகிறது.

புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு, இந்த நிபுணர் குழு, கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. நவம்பர் 30ஆம் திகதி வரை யோசனைகளை சமர்ப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று போன்ற நெருக்கடிகளால், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை சமர்ப்பிக்க டிசெம்பர் 31ஆம் திகதி வரை காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்னர் தான், தமிழ் தேசியக் கட்சிகள் தூக்கத்தில் இருந்து எழும்பியிருக்கின்றன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு கி்ட்டத்தட்ட நாற்பது நாட்களாக தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுபற்றி கண்டுகொள்ளவேயில்லை.

கடந்த வாரம் தான் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று கூடி பேசி, இந்த நிபுணர் குழுவுக்கு வரைவு ஒன்றை சமர்ப்பிப்பது என்று முடிவு செய்திருக்கின்றன. இதற்கென மாவை.சோ.சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 10 நாட்களுக்குள் இந்த நிபுணர் குழுவின் யோசனையை மாவை சேனாதிராசா மூலமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தலைகீழாக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை சமர்ப்பிப்பதில் ஏன் இந்தளவுக்கு அசமந்தமாக இருந்தார் என்ற கேள்வி உள்ளது.

இப்போதாவது, தமிழ்க் கட்சிகள் விழித்துக் கொண்டிருப்பது ஆறுதலான விடயம் தான். ஆனாலும், ஒரு அரசியலமைப்பு யோசனை வரைவை 10 நாட்களில் தயாரிப்பதென்பது, ஆச்சரியமான விடயம் தான். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது மிக நீண்ட சிக்கலான செயல்முறைகளைக் கொண்டது. நீடித்து நிலைத்திருக்க வேண்டிய ஒரு அரசியலமைப்புக்கான யோசனையை அவசர கதியில் தயாரிக்க முடியாது.

இது தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுக்கு தெரியாத விடயமல்ல. ஆனாலும் அவர்கள், இவ்வாறான ஒரு குறுகிய காலஎல்லைக்குள் வரைவைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள். தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, ஒரு சாதகமான விடயம் உள்ளது. கடந்த அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரைவுகள் அவர்களின் கைகளில் உள்ளன.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வரைவை கையளித்திருந்தது. வடக்கு மாகாணசபையும் ஒரு யோசனையை முன்வைத்திருந்தது. இந்த இரண்டையும் உள்ளக்கியே ஒரு வரைவு உருவாக்கப்படவுள்ளது. அதேவேளை, தற்போதைய அரசியலமைப்பு வரைவுக்குழுவிடம் கையளிப்பதற்காக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.விக்னேஸ்வரனும் ஒரு நிபுணர் குழுவை அமைத்து வரைவு ஒன்றை தயாரிக்கிறார்.

அதுபற்றி தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில், கூறப்பட்டதை அடுத்து, அந்தக் குழுவின் யோசனைகளையும் உள்வாங்கி புதிய வரைவை தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பு என்பது அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு.

குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு. அதிகாரங்கள் பகிரப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. அவற்றை உள்ளடக்கிய ஒரு வரைவைத் தயாரிப்பதில் தமிழ்க் கட்சிகளின் கூட்டு சரியாக செயற்பட்டிருக்கிறது என்று கூறமுடியாது.

ஏனென்றால் இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவுமில்லை. இந்த வரைவுக்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கப் போவதும் இல்லை. அதேவேளை விக்னேஸ்வரன் தரப்பு இன்னமும் தனிவழியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் பொதுவான ஒரு வரைவை முன்வைத்து அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புகளை தமிழ்க் கட்சிகள் தவற விட்டிருக்கின்றன.

பொதுவான வரைவு ஒன்று முன்வைக்கப்படுவதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறையுள்ள, ஆர்வம் கொண்ட தரப்புகள் விரும்பும். அதேவேளை, என்னதான் யோசனையை முன்வைத்தாலும், அரசியலமைப்பு உருவாக்க நிபுணர் குழு, இவற்றைக் கவனத்தில் கொள்ளுமா என்ற சந்தேகங்கள் உள்ளன. ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கையில் வைத்துக் கொண்டு, தமக்கு சாதகமான- தம்மை ஆட்சிபீடம் ஏற்றிய சிங்கள பௌத்த மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் அரசியலமைப்பு ஒன்றையே வரையவுள்ளது.

இவ்வாறான ஒரு அரசியலமைப்பில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், நலன்கள் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், இந்த வாய்ப்பை தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வரலாற்றுப் பழி வந்து விடக்கூடாது.

Related posts