இன்றும் சில பிரதேசங்களுக்கு பலத்த மழை எதிர்ப்பார்ப்பு

புரெவி (“BUREVI”) என்ற சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து இன்று அதிகாலை 02.30 மணியளவில் மன்னாருக்கு மேற்கு – வடமேற்கு திசையில் ஏறத்தாழ 143 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது. எனவே சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 55-65 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 75 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக அல்லது உயர் அலைகளுடன் காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 0.5 – 1.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாகமுல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இன்று இரவு வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts