வவுனியாவில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்..!!

தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இன்று மாலை 5 மணியின் பின்னர் வவுனியாவை ஊடறுத்து மன்னாரை நோக்கிச் செல்லவுள்ளது.

இதனால் வவுனியாவில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசவுள்ளதால், தாழ் நிலப் பகுதியிலிருப்பவர்கள், தற்காலிக வீடுகளில் வசிப்பவர்கள், மரங்களுக்கு கீழ் வசிப்பவர்கள் மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலைய அவதானிப்பாளர் த.சதானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது புரவி புயலாக மாற்றமடைந்துள்ளது.

இதனால் வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வீசுவதுடன், இன்று மாலை 5 மணியின் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வவுனியாவை ஊடறுத்து மன்னாரை நோக்கிச் செல்லவுள்ளது .

இக்காலப்பகுதியில் இடி மின்னல் தாக்கம் அதிகரிக்கும். இதன்போது மழை வீழ்ச்சியானது 150 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவாகும் போது வவுனியாவிருந்து மன்னாரை நோக்கி இப்புயல் செல்லவுள்ளது. இன்றைய இரவுப் பொழுது மிகவும் அவதானத்துடன் இருக்கவும்.

இடி மின்னல் தாக்கத்தின்போது மின்சார உபகரணங்களை நிறுத்தி வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்” என்று மேலும் தெரிவித்துள்ளார் .

Related posts