யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு..!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (புதன்கிழமை) யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கைத் தமிழரசிக் கட்சியின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 19 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ள அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதனால் யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை சீரமைத்து மீளவும் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts