மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கட்டாக்காலிகளாக வீதிகளில் நடமாடுகின்ற மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையினை மன்னார் மாவட்டச் செயலகம் முன்னெடுத்துள்ளது.
இந் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று மாலை மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நடமாடிய மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் பிரதேச செயலகம், மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
பிடிக்கப்பட்ட மாடுகளை மன்னார் பிரதேசசபையிடம் ஒப்படைத்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப், மன்னார் நகரசபை உறுப்பினர்கள், மன்னார் பிரதேசசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து நேரடியாக சென்று மாடுகளை பிடித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பராமரிப்பின்றி வீதிகளில் சுற்றித் திரியும் கால் நடைகள் பிடிக்கப்பட்டால் கால்நடைகள் ஏலம் விடப்படும் அல்லது உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என மன்னார் மாவட்டச் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்களினால் பராமரிக்கப்படாமல் இருக்கும் கால்நடைகள் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் வீதிகளில் சுற்றித் திரிந்து விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் விவசாய நிலங்கள் புதிதாக நடப்படும் கண்டல் தாவரங்களை உணவாக உட்கொண்டு சேதப்படுத்தி வீதிகளையும் அசுத்தப்படுத்தி விடுகிறது.
மேலும் நோயாளர் காவு வண்டி மற்றும் வாகனங்கள் அவசர தேவைகளுக்காக செல்ல முடியாமல் உள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே வருமானம் இல்லாத பிரதேசசபைகள் இவ்வாறான கால்நடைகளை பிடித்து ஏலம் விட்டு சபைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது கால்நடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.