பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்..!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்தன் தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக கட்சி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளராக பணிபுரிந்து வந்த ஜெகநாதன் ஜெயராஜ் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக தலைமை பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த மாதம் 9ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து சென்ற  சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts