பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடையை நேக்கு மேல் நீதிமன்றம் உத்தரவு

பொது நிதியில் ஜி.ஐ குழாய் கொள்வனவு மற்றும் ஐம்பது இலட்சம் பஞ்சாங்க நாட்காட்டிகள் அச்சிடப்பட்ட வழக்கில் பசில் ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு செல்வதற்கான தடையை நீக்கி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரஜபக்ஷ மற்றும் திவி நெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவிற்கும் எதிரான குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

இதன்போது இருவருக்கும் விதிக்கப்பட்ட வெளிநாட்டு தடையையும் நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் தம்மிக்க கணேபொல மற்றும் தமித் தொட்டவத்த அகியோர் உத்தரவிட்டனர்.

2015ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின்போது திவிநெகும திணைக்களத்துக்கு சொந்தமான 29.4 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதியின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறித்த ஐம்பது இலட்சம் பஞ்சாங்க நாட்காட்டிகள் அச்சிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு திவிநெகும திணைக்களத்தின் 36 மில்லியன் ரூபாய் நிதியில் ஜி.ஐ குழாய்களைக் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்னொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக இன்று இடம்பெற்ற கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது

Related posts